டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 9500 கிலோ எடையில் 6.5 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட வெண்கலத்திலான தேசிய சின்னம அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பிரபல நிறுவனமான டாடா நிறுவனம் கட்டி வருகிறது. இந்த இந்த புதிய கட்டித்திற்கான மதிப்பு ரூ.1250 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிநவீன வசதியுடன்  கட்டப்பட்டு வரும் இந்த பாராளுமன்ற கட்டிடத்தில், இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என அளவில்லா வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், எதிர்காலத்தில்  விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க  வகையிலான மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த  புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை (நான்முகச் சிங்கம்)  பிரதமர் மோடி திறந்து வைத்தார். (சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய சின்னமாக 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று  ஏற்றுக் கொள்ளப்பட்டது) இந்த நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த பிரமாண்டமான தேசிய சின்னம் (நான்முகச் சிங்கம்) 6.5 மீ உயரம் மற்றும் 9500 கிலோ எடையுடன் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக கணமுடன் கூடிய தேசிய சின்னம் பல்வேறு தனித்துவங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் தேசிய சின்னமாக நான்முக சிங்கம், முற்றிலும் 100க்கும் மேற்பட்ட இந்திய கைவினைஞர்களால் உயர் தூய்மையான வெண்கலத்தால் நுட்பான முறையில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களின் சுமார் 6மாத தொடர்பணி காரணமாக, இந்த அழகிய தேசிய சின்னம் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.  6.5 மீட்டரும் 9500 கிலோ எடையும் கொண்ட இந்த சின்னமானது, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. இந்த சின்னமானது, ஆத்மா நிர்பார் பாரதத்தின் பல்வேறு கூறுகளை சித்தரிக்கிறது. நமது ஜனநாயகத்தின் கோவிலின் உச்சியில் – நாடாளுமன்ற கட்டிடத்தில் அமர்ந்திருக்கும் போது, அது உண்மையிலேயே ‘மக்களுக்காக, மக்களால்’ என்ற முன்னுதாரணத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.