பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இன்று  14-வது சர்வதேச விமான கண்காட்சியை (Aero India 2023 ) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடைபெற்ற  விமானப்படை வீரர்களின் சாகசத்தை கண்டுகளித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு  அருகே உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டு,  , 14-வது சர்வதேச விமான கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி உள்ளது. இது வரும் 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று  காலை தொடங்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின. விமானப்படை வீரர்கள்  காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை விமானங்களில் சாகசங்கள் செய்து அசர வைத்தனர். இதை பிரதமர் மோடி, மத்திய, மாநில அமைச்சர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

இன்று காலை எலகங்கலா வந்த பிரதமர் மோடி சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நிறைவடைந்ததும் எலங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியா புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் 100 உலக நாடுகளின் நம்பிக்கையை வளர்த்துள்ளது. பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புக்கான வழியை விமான கண்காட்சி திறக்கும். பாதுகாப்புத்துறை இல்லாத நாடுகளுக்கு இந்தியா சிறந்த சகோதரனாக உருவாகி வருகிறது. பாதுகாப்புத்துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. பாதுகாப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது. விரைவான முடிவுகளை எடுக்கிறது என்று கூறினார்.