சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசவும் முதலமைச்சர் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தினசரி பல்வேறு செய்திகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த ஊழலில், திரைப்பட தயாரிப்பாளர் உள்பட ஆளும் கட்சியின் முக்கிய நபர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை  நிரூபிக்கும் வகையில் இருவர் திடீரென தலைமறைவாகி இருப்பதும் அரசியல் களத்தில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறை யின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழக மக்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் நாளை  நடைபெறும்  10வது  நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று காலை  டில்லி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி தலைமையில்  10வது நிதி ஆயோக் கூட்டம்  டெல்லியில், நாளை  நடைபெற உள்ளது. நாளைய கூட்டத்தில்  பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார்.  தலைநகர் டில்லியில் முக்கிய பிரமுகர்களை ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ள ஸ்டாலின்,  நாளைய நிதிஆயோக் கூட்டத்திலும் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

அத்துடன்,   பிரதமர் மோடியை  இன்று இரவு அல்லது நாளை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிதி ஆயோக் கவுன்சிலின் முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.