டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில், முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி தலைமையில் நாளை கேபினட் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி பயங்கரவாத குழுக்களை கூண்டோட அழிக்க திட்டமிட்டு வருகிறது. இதனால், பாகிஸ்தான், எல்லைப்பகுதிகளில் ராணுவத்தை குவித்த வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய துருப்புகளும் தயராக உள்ளது.மேலும், அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.
மேலும் காஷ்மீர் மாநிலத்திற்குள் பயங்கரவாதிகளை தேடி வேட்டையாடும் பணிகளும் தொடர்ந்து வருகிறது. மேலும், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.
இநத் நிலையில், இன்று முப்படை தளபதிகளுடன், டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், முப்படைத் தளபதிகள், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், பாகிஸ்தான்மீதான தாக்குதல் குறித்து விவாதித்ததாகவும், இந்தியாவின் பதிலடி முறை, இலக்குகள், நேரத்தை தீர்மானிக்க ஆயுதப்படைகளுக்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் உள்ளது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.