சென்னை: பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பெருமை என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இரண்டுநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கொண்டு, அவரது நினைவாக நாணயம் வெளியிடுகிறார்.

இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு தரப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பதாகவும், அப்போது, அவரிடம் தமிழ்நாடு அரச தரப்பில் மனு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று  சென்னை சென்னை அடையாறு முகத்துவாரத்தில்  நடைபெற்ற சர்வதேச சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு நாள் விழாவில் கலந்துகொண்ட  அமைச்சர்  தங்கம் தென்னரசு,   அலையாத்தி தோட்டம் எழுப்புதல் நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹீ, அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,  ”சதுப்பு நில சூழல் பாதுகாப்பு நாளை முன்னிட்டு சென்னை அடையாறு முகத்துவாரத்தில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் நோக்கத்தில் அதற்கான மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடலோரங்களில் உள்ள 14 மாவட்டங்களிலும் இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம், கடல் அரிப்புகளை தடுக்க இந்த அலையாத்திக் காடுகள் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்தும் கடலோரப் பகுதிகளை பாதுகாக்க ஒரு தொலைநோக்கு திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டு கூடுதலாக 6 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் பிரதமர் மோடி நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர்.  அங்குள்ள பொன்னேரி ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் பாசன பரப்பு ஏறத்தாழ 1,374 ஏக்கர் உள்ளது. அந்தப் பாசன பகுதிகளுக்கும், அங்குள்ள விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், அந்த ஏரியை சுற்றுலாத் தளமாக மாற்றவும் தமிழக அரசு சார்பில் ரூ.19.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏரியின் புனரமைப்பு மற்றும் நீர் வரத்து கால்வாய்கள், உபரி நீர் வழி கால்வாய்கள் ஆகியவற்றை மறுசீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1000-வது ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரத்து வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பெருமை.

இவ்வாறு கூறினார்.