டெல்லி : பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமரின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துபூர்வமாக அளித்தார். அதில்,
கடந்த 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக மத்தியஅரசு ரூ. 517.82 கோடி செலவிட்டு உள்ளது. அத்துடன் அவர் எந்தெந்த நாடுகளக்கு சென்றுள்ளார் என்ற பட்டியலும் தரப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வெளிநாட்டு பயணத்தின்போது, இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடனான இந்திய உறவுகளை பலப்படுத்தியுள்ளது.
இவ்வாறு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.