சென்னை:
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 26 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்களும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். மாலை 4 மணி அளவில் சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சேவை, 294 கோடி ரூபாயில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் ரயில் சேவையை நாட்டுக்கு அர்பணிக்க உள்ளார்.

பின்னர் விவேகானந்தர் இல்லம் செல்லும் பிரதமர், ராமகிருஷ்ணா மடத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இதையடுத்து பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழா முடிந்ததும், மைசூர் செல்லும் பிரதமர், நாளை காலை தெப்பக்காடு முதுமலை யானைகள் காப்பகத்துக்கு சென்று, ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்பட தம்பதியை சந்திக்கவுள்ளார்.