டில்லி:
இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.. நாட்டின் பொருளாதார நிலவரங்களில் கவனம் கொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சில மாதங்களாக வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் தனது வெளிநாட்டு பயணங்களை தொடங்கினார்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வந்த மோடி, மார்ச் மாதம் சுவீடன், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும், பின்னர் சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் வெளிநாடு பயணம் செல்கிறார். வரும் 11ந்தேதி அண்டை மாநிலமான நேபாளத்தில் 2 நாள் அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேபாளம் சென்றிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக மீண்டும் நேபாளம் செல்கிறார்.
அங்கு அருண்-3 எனப்படும் 900 மெகாவாட் ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்திட்டம், பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.