சென்னை: கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை  வருவதையொட்டி, சென்னையில் 22,000 போலீசாருடன் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன் இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப் பட்டு உள்ளது.


3 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை மாலை தமிழ்நாடு வருகிறார். நாளை மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.  இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் செல்கிறார்.

கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி, நாளை பிற்பகல் பெங்களூரில் இருந்து தனி விமானத்தில்  சென்னை வருகிறார். மாலை  4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர். மோடி  சென்னை வருவதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  மேலும்,   தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில்  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற்றனர்.

இதையடுத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பாரத பிரதமர் அவர்கள் 19.1.2024 அன்று, சென்னை, பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023ஐ துவக்கி வைப்பதற்காக, 19.1.2024 அன்று சென்னைக்கு வருகை தந்து, 20.1.2024 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ளார்.

இதன் காரணமாக, சென்னையில் 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு  உள்ளது. மேலும்,  1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-ன் கீழ், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட, 01.01.2024 முதல் 29.2.2024 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ். அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பாரத பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் (DRONE CAMERA) மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, 19.1.2024 மற்றும் 20.1.2024 ஆகிய இரு நாட்கள் உட்பட, மேற்குறிப்பிட்டவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.