டெல்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கித் தவிக்கும் சீன மக்களுக்கு துணை நிற்போம் என பிரதமர் மோடி சீன அதிபர் ஜிஜின்பிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவில் இதுவரை 811 பேரை பலிகொண்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கொரோனா, வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் சீன மக்கள் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இந்தியா துணை நிற்கும் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிராக சீனாவுக்கு உதவிக் கரம் நீட்ட இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.