டெல்லி: நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் என்று ரபேல் விமானங்கள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு  இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க  ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்தது. இதையடுத்து, முதற்கட்டமாக 5 விமானங்கள் பிரான்சில் இருந்து ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று வந்தது.
அப்போது விமான தளத்தில் ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படை தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.

இந்நிலையில், இந்தியா வந்த ரபேல் விமானங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் என்று தெரிவித்துள்ளார்.