சென்னை; வீடுகள் தோறும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோல, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் கொடியேற்றுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்த மாநில கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் இன்றுமுதல் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் . தன்னுடைய எக்ஸ் தளத்தின் தன்னுடைய முகப்பு பக்கத்தில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹர் கர் திரங்கா (அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி) என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம்) மூலம் இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களின் வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78-வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஊக்குவிக்கும் ஒரு பிரசாரமாகும்.
“இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன். இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், உங்கள் தற்படங்களை(செல்ஃபி) https://harghartiranga.com இல் பகிரவும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றவும், சுதந்திர தினம் தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பதிவாளர் டாக்டர் ஆறுமுகம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இல்லந்தோறும் மூவர்ணக்கொடி என்பதற்கிணங்க தேசிய கொடி ஏற்றவும், சுதந்திர தினத்தையொட்டி கல்லூரிகளில் சுதந்திர தினத்தை கவுரவிக்கும் வகையில் மாணவர்களிடையே போட்டிகள், விவாதங்கள், கண்காட்சிகள், மாரத்தான் மற்றும் ஓட்டம் போன்னவை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.