டெல்லி: கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று வயநாடு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடா்ந்து முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேரழிவு ஏற்பட்ட பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு,
காலை 11 மணியளவில் கண்ணூர் வருகிறார். பின்னர் அங்கிருந்து பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை வான்வழியாக பார்வையிடுகிறார். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அவரிடம் மீட்புப் பணிகள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். தொடர்ந்து நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கும் அவர் செல்கிறார்.
அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர் நலம் விசாரிக்க உள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றும் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில், வயநாடு சம்பவம் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.