டில்லி
வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத் செல்ல உள்ளார்.
இமயமலையில் பல புண்ணிய தலங்கள் உள்ளன. அவற்றில் உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் பிரசித்தி ஆனவை. கேதார்நாத் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது செல்வதைப் பிரதமர் மோடியின் வழக்கமாகும்.
சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் கேதார்நாத் செல்லவில்லை. வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு வர உள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தெரிவித்துள்ளார்
இது குறித்து புஷ்கர் சிங் தாமி, “வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறு சீரமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தவிர கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை மோடி திறந்து வைக்க உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.