ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் முதல் சீனப் பயணம் இது என்பதால் 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு இருநாட்டு உறவிலும் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய இந்த பயணம் உதவும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அமெரிக்கா தனது வர்த்தகப் போரை விரிவுபடுத்தி வருவதோடு இந்தியா மீதும் வரி உயர்வை அறிவித்து அச்சுறுத்தி வரும் நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா செல்ல உள்ள நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.