டில்லி
இந்த வாரத்தில் பிரதமர் மோடி இந்தியா அமைத்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய உள்ளார்.
இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் சீனாவைத் தவிர சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, இலங்கை உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன. தற்போது அதிக அளவில் வர்த்தகம் செய்யும் நாடு சீனாவாக உள்ளது.
தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் எல்லை மோதலால் இந்தியா சீனப் பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்தியா சீனா வர்த்தகம் சென்ற ஆண்டு மட்டும் 4866 கோடி டாலர்களாக இருந்தன, இவற்றில் பெரும்பாலானவை அத்தியாவசிய மூலப் பொருட்களாகும்.
இதில் பெட்ரோலிய பொருட்கள், ஆர்கானிக் கெமிகல் பொருட்கள், இரும்பு தாது, பருத்தி, பிளாஸ்டிக் மூலப்பொருள், ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இதைப் போல் தொலைத் தொடர்பு சாதனங்கள், மின்னணு பொருட்கள், தினசரி உபயோகப் பொருட்கள் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் குறித்த அறிக்கைகளைத் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமருக்கு விரைவில் அளிக்க உள்ளார் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வாரம் பிரதமர் மோடி அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகு வர்த்தக கொள்கை மாற்றுவது குறித்துப் பிரதமர் நிதி அமைச்சகத்துடன் விவாதிக்க உள்ளார்