டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ந்தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளுடன் சேர்ந்த ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த குவாட் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக முதல் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. தொடர்ந்து 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம், உக்ரைன் போர் உள்பட பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தனியாக சந்திப்பு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.