டெல்லி: கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்துதல் குறித்து மாநில முதல்வர்களுடன் வரும் 11ந்தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 13ந்தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி 11-ந் தேதி (திங்கட்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து, அடிக்கடி மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து, முடக்கம் மற்றும் தளர்வுகளை அறிவித்து வந்த பிரதமர், தற்போது, முதன்முறையாக தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.