ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தின் உலகின் மிக உயரமான  உதாம்பர் ரயில் பாலம்  திறந்து வைப்பதுடன், காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் முதல் வந்தேபாரத் ரயில் சேவை வரும் 19ந்தேதி தொடங்க உள்ளது. அத்துடன்,   ரூ.35ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான உதாம்பூர் ரயில் பாலமும் திறக்கப்பட உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்,   உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இடையே இயக்கப்பட உள்ளது.  இந்த ரயில் இயக்கப்படும்   272 கி.மீ ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், வரும் 19ந்தேதி அன்று காஷ்மீர் மாநிலம்  கத்ராவில்  நடைபெறும் நிகழ்ச்சியில்,   காஷ்மீருக்கான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஜம்மு ரயில் நிலையத்தில், புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமல், நடைபெற்று வருவதன் காரணமாக, அங்கு ரயில் சேவையை தொடங்குவதற்கு பதிலாக,   கத்ராவில் இருந்து ரயில் இயக்கப்படும் வகையில், வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கத்ரா-காஷ்மீர் இடையே ரயில் சேவையை தொடங்குவதற்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதையடுத்து, இந்த சேவை இந்த  மாதம்  தொடங்க உள்ளது. இந்த ரயில் சேவை மூலம்,  ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜம்முவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   “உதாம்பூர் பகுதிக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். உலகின் பெரிய ரயில்வே மேம்பாலத்தை அவர் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கத்ராவில் இருந்து வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்,”என்றார்.

காஷ்மீருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் இந்த திட்டத்தின் தொடக்கவிழா நடைபெறுகிறது. இப்போது சங்கல்தான்-பாரமுல்லா இடையே மட்டும் ரயில்சேவைகள் இயக்கப்படுகின்றன. கத்ரா பகுதியில் இருந்து நாட்டின் பிறபகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1997ஆம் தேதி தொடங்கியது. ஆனால், புவியல் ரீதியான, மலைப்பகுதியில் நில அமைவு, காலநிலை போன்ற காரணங்களால் தாமதம் நேரிட்டது. இந்த திட்டத்தில் 119 கி.மீ நீளத்தில் 38 சுங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் டி-49 என்ற சுரங்கம் 12.75 கி.மீ நீளம் கொண்டதாகும். இது நாட்டின் பெரிய போக்குவரத்து சுரங்கபாதையாகும்.

சென்னாப் மேம்பாலமும் அதில் ஒன்றாகும். இதன் மொத்த நீளம் 1,315 மீட்டர்கள் ஆகும். அதன் வளைவு பாலம் மட்டும் 467 மீட்டர் கொண்டதாகும். இது ஆற்றுப்படுகைக்கு 359 மீட்டருக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது. ஈபிள் டவரை விடவும் 35 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். உலகின் ரயில்வே வளைவு மேம்பாலங்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று அதிகாரிகள கூறினர்.