பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார், அதில் இந்தியாவும் அமெரிக்காவும் “இரண்டு சிறந்த ஜனநாயக நாடுகள்” என்றும் அவை நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் “உலகத்தை ஒளிரச் செய்யும்” என்றும், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியாக ஒன்றாக நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

இதுகுறித்து மோடி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி டிரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
வர்த்தக வரிகள் மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்கா-இந்தியா உறவில் எழுந்துள்ள நிலையில் இந்த தொலைபேசி அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை, வெள்ளை மாளிகையில் நடைபெற தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய மக்களுக்கும் இந்திய-அமெரிக்கர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய எண்ணெயை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக அப்போது அவர் கூறினார்.
கொண்டாட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், செவ்வாயன்று பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், இரு தரப்பினரும் “இரு நாடுகளுக்கு இடையே சில சிறந்த ஒப்பந்தங்களில் பணியாற்றி வருவதாகவும்” கூறினார்.
“நான் இன்று உங்கள் பிரதமரிடம் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். வர்த்தகம் பற்றி பேசினோம். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், ஆனால் பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி. அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்,” என்று அவர் கூறினார்.