டெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, போரை விடுத்து பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்றும், அங்குள்ள இந்தியர்கள் வெளியேற உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
நேட்டோ அமைப்பு, தனது பன்னாட்டு போர்த் தளவாடங்களை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான எஸ்டோனியா, லித்துவேனியா, போலாந்து ஆகியவற்றில் குவித்து வைத்துள்ளது. ரஷ்யாவின் எல்லைப் பகுதி நாடுகள் அனைத்திலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்டை நாடானா உக்ரைனும் நேட்டோவுடன் இணைய முயற்சித்து வந்தது. அவ்வாறு ஒர் நிகழ்வு நடைபெற்றால், அது ரஷியாவுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த ரஷிய அதிபர், ரஷ்யாவின் எல்லைப் பகுதி நாடுகள் அனைத்திலும், நேட்டோ தனது படைகள் அனைத்துமே வெளியேற்றப்பட வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், அதை நேட்டோ ஏற்காத நிலையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கி உள்ளது.
ரஷிய நாட்டின் மக்களை காப்பதற்காக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறிய ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.அதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி தாக்குதல், கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகள் படைகளின் தாக்குதலை நடத்துவதால் பெரும் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக இந்திய அதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும். ரஷ்ய அதிபர் புதினிடம் போரை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று மாலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது, புதினிடம், உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். வன்முறையை விடுத்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கலாம் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களின் நிலை கவலையளிப்பதாக புதினிடம் மோடி தெரிவித்துள்ளார். அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா தனது நடுநிலைமையை கைவிட வேண்டும் என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக ரஷ்யாவின் உலகளாவிய கண்டனத்தில் சேர வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.