டில்லி
தற்போதுள்ள போர் சூழலில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் உக்கிரம் அடைந்துள்ளதால், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 1,300ஐ நெருங்கி உள்ளது. பிரதமர் மோடியிடம் போர் நிலவரத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்து கூறினார்.
இது குறித்து பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில்,
”இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்”
என்று பதிவிட்டுள்ளார்.