டில்லி
பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
பலருக்கும் சமீப காலமாகப் பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் குறித்துப் பல ஊகங்கள் இருந்து வருகின்றன. வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. அதில் தற்போது தனது சொத்து விவரங்களை அவர் அறிவித்துள்ளார். அதன்படி அவருடைய தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு :
பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இது 2.85 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 22 லட்ச ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த சொத்து மதிப்பு உயர்வுக்குக் காரணம், குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத் தொகை கடந்தாண்டு ரூ.1.6 கோடியில் இருந்து ரூ.1.86 கோடியாக அதிகரித்தது என குறிப்பிடப்பட்டுள்ளது
அவரது சமீபத்தைய சொத்து மதிப்பு தரவுகளின்படி, அவருடைய வங்கிக் கணக்கில் 1.5 லட்ச ரூபாயும், ரொக்க கையிருப்பாக 36,000 ரூபாயும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்குச் சந்தை முதலீடு அல்லது மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை; அவற்றிற்குப் பதிலாக தேசிய சேமிப்பு திட்டத்தில் 8.93 லட்ச ரூபாயும், காப்பீடு பாலிசிகளில் 1.50 லட்ச ரூபாயும், எல் அண்ட் டி இன்பிரா பாண்ட்களிலும் முதலீடு செய்துள்ளார்.
மோடிக்கு ரூ. 1.48 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. தவிர அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.97 கோடி ரூபாயாக உள்ளது. மோடி தனது பெயரில் எந்த வாகனமும் வைத்துக்கொள்ளவில்லை மேலும் எவரிடமும் எந்த கடனும் வாங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு காந்திநகரில் செக்டார்-1ல் 401/ஏ என்ற முகவரியில் வீட்டுமனை உள்ளது. இதில் 25 சதவீதம் மட்டுமே மோடிக்குச் சொந்தமானதாகும். மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பின்னர், நிலம் வாங்குவதில் அவர் எந்த முதலீடும் செய்யவில்லை என்று வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.