டெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ஆம் தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று பிப்ரவரி 1ந்தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 4வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இதையடுத்து, அவர் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 11 மணி அளவில் நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளிப்பது வாடிக்கையானது.