டில்லி

லைநகர்  தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், அமைக்கப்பட்டு உள்ள பா.ஜ.க, புதிய தலைமையகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பாஜக வின் புதிய தலைமையகம் டில்லி தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டிடத்துக்கான அடிக்கல்லை கடந்த 2016ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மோடி நாட்டினார்.    தற்போது முடிவடைந்துள்ள பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தை, இன்று நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த புதிய தலைமையகக் கட்டிடம் மூன்று தளங்கள் மற்றும் ஏழு தளங்கள் என, இரு கட்டடங்கள் உடையதாக அமைக்கப் பட்டுள்ளது. இரு கட்டடங்களுக்கு நடுவில் ஒரு பூங்காவும், கட்சியின் தேர்தல் சின்னமான, தாமரையின் வடிவில் சிறிய குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியான மூன்று தளங்கள் உடைய, முக்கிய அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில், கட்சி தலைவருக்கும், பார்லிமென்டின், இரு சபைகளின் கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலர்களுக்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.   பாஜக வின் தேசியத் தலைவரான அமித்ஷா கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள தன் அறையில் இருந்து, வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும், பார்க்க முடியும்.

அத்துடன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவதற்கான வசதியும் இந்த புதிய வளாகத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தில் 450 பேர் மற்றும் 150 பேர் அமரக் கூடிய வசதியுடன் கூடிய, இரு கருத்தரங்க கூடங்கள் அமைக்கபட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்துவதற்காக, தரைக்கு அடியில் இரண்டடுக்கு, ‘பார்க்கிங்’ வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அதிக வெளிச்சம் கிடைக்கும் வகையில் பசுமை கட்டடமாக அமையும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  அது மட்டுமின்றி சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கான வசதி கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

கட்சி தலைமையகத்தில் இருந்து அனைத்து மாநில தலைமை அலுவலகங்களுடன் உடனடி தொடர்பு கொள்வதற்கான வசதியுடன், இந்த புதிய தலைமையகம் முழுவதும், ‘வை – பை’ வசதி செய்யப்பட்டுள்ளது.