டெல்லி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 10ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, நமது நாட்டுக்கு 2000 விமானங்களை கொள்முதல் செய்ய விமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், ஏழைகளின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது, எந்தவொரு ஆதிவாசிக்கு சொந்த மான நிலத்தையோ அல்லது சொத்தையோ வக்ஃப் வாரியம் தொட முடியாது. இதுதான் உண்மையான சமூக நீதி என்று கூறினார்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 14ந்தேதி) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய முனையக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.10,000 கோடி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் மற்றும் இந்தியாவிற்கு 2000 புதிய விமானங்கள் வாங்க உள்ளதாகவும் கூறினார்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு ஆகியோருடன், ஹிசாரில் இருந்து அயோத்திக்கு செல்லும் 70 இருக்கைகள் கொண்ட அலையன்ஸ் ஏர் விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், மேலும் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி யமுனாநகருக்குச் சென்றார். இதில், தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தில் ரூ.8,470 கோடி மதிப்பிலான 800 மெகாவாட் அனல் மின் அலகுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது, இது மாநிலத்தின் மின்சாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் கோபர்தான் முன்முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தூய்மையான எரிசக்தி மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஆண்டுக்கு 2,600 மெட்ரிக் டன் திறன் கொண்ட, யமுனாநகரில் உள்ள முகராப்பூரில் ஒரு சுருக்கப்பட்ட பயோகேஸ் ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கூடுதலாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,070 கோடி மதிப்பிலான ரேவாரி பைபாஸ் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். 14.4 கி.மீ நீளமுள்ள இந்த பைபாஸ், ரேவாரி நகரில் நெரிசலைக் குறைத்து, டெல்லி-நர்னால் பயண நேரத்தை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குறைத்து, பிராந்திய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை அதிகரிக்கும்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
“2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்து வருகின்றன. விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
காங்கிரஸ் அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாக மாற்றியது. அவசரநிலையின் போது, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற் காக அரசியலமைப்பு கொல்லப்பட்டது.

அரசியலமைப்பு மதச்சார்பற்ற சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. இன்று, உத்தரகண்டில் சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது.
இடஒதுக்கீட்டின் பலன்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் சரிபார்க்கவில்லை.
காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக வக்ஃப் விதிகளையும் மாற்றியது. வக்ஃப் என்ற பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டார் நிலங்கள் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்குப் பயனளித்திருக்கும். ஆனால், நில மாஃபியாக்கள்தான் பயனடைந்து வந்தார்கள்.
ஏழைகளின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவது இந்த சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், எந்தவொரு ஆதிவாசிக்கு சொந்த மான நிலத்தையோ அல்லது சொத்தையோ வக்ஃப் வாரியம் தொட முடியாது. இதுதான் உண்மையான சமூக நீதி”.
இவ்வாறு கூறினார்.