டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை போலந்து புறப்பட்டுச் சென்றார். போலந்து பயணத்தை முடித்துவிட்டு ஆக. 23 உக்ரைன் செல்கிறார்.
கடந்த ஜூலை மாதம் இரு நாள் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்த நிலையில், தற்போது வரும் 23ந்ேதேதி பிரதமர் உக்ரைனுக்கு செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். போலந்தில் இருநாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் ஆக. 23ஆம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார்.
உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளைக் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் இரு நாடுகளும் பெரும் அழிவை சந்தித்து வருகின்றனர். இதனால், போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்துதரும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவது குறித்து ரஷிய அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தற்போது அவர் உக்ரைன் அதிபரிடமும் உயர்மட்ட அதிகாரிகளுடனும் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.