டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனெகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது.
ஐசிஎம்ஆரும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளுக்கும் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால், விரைவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், நாட்டுக்கும் வாழ்த்துக்கள்.
கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள 2 தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது இந்தியர்களை பெருமை அடைய செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.