டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில், பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்கும் வகையில் சிந்தூர் என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், குடும்பத் தலைவர்களாக திகழும் ஆண்களே தீவிரவாதிகளின் இலக்காக இருந்துள்ளனர். இதனால் கணவர்கள், குடும்பத்தலைவர்களை இழந்து தவிக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு உரிய நீதி பெற்றுத் தரப்படும் என்று பிரதமர் மோடி சூளுரைத்த நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், இந்த தாக்குதல் சிந்தூர் என்ற பெயரில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், பஹல்காம் பகுதியில் கடந்த நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது, அருகே இருந்த காடுகளில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இயந்திர துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பெண்கள் யாரும் கொல்லப்படவில்லை. மாறாக ஆண்களே குறிவைக்கப்பட்டுள்ளனர். இந்துக்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், தாக்குதலில் இருந்து தப்பியவர்களால் சொல்லப்பட்டது. கொல்லப்பட்ட நபர்கள் இந்துதானா என்பதை கண்டறிந்தபிறகே தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், தனது கணவரை கொலை செய்த தீவிரவாதிகளிடம் அவரின் மனைவி ஒருவர் தன்னையும் கொன்றுவிடுமாறு கெஞ்சிய போதும் தீவிரவாதிகள் அவரை கொலை செய்யவில்லை. இந்த தாக்குதலில் பல பெண்கள் தங்களது குங்குமங்களை இழந்தனர்.
இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி, தாக்குதல் சம்பவத்தில், குடும்பத் தலைவர்களாக திகழும் ஆண்களே தீவிரவாதிகளின் இலக்காக இருந்துள்ளனர். இதனால் கணவர்கள், குடும்பத்தலைவர்களை இழந்து தவிக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு உரிய நீதி பெற்றுத் தரப்படும் என்று பிரதமர் மோடி சூளுரைத்தார்.
இதையடுத்து, இந்திய பெண்களின் நெற்றிப் பொட்டில் உள்ள குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கிலேயே இந்த பதிலடி நடவடிக்கைக்கு, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07/05/25) நள்ளிரவு 1.44 மணி அளவில் இந்திய முப்படைகள் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்ள முரித்கேரி மற்றும் அந்த அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத், ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு செயல்படும் பஹவல்பூர், தெஹ்ர் காலன், கோட்லியில் இரு இடங்கள், முஷாஃபராபாத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு செயல்படும் கோட்லி, சிகல்கோட் பகுதிகள் என மொத்தம் 9 இடங்களில் இந்திய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 4 இடங்கள் பாகிஸ்தானிலும், 5 இடங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைகளை பாராட்டியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதில் நடவடிக்கைதான் ‘ஆபரேஷன் சிந்தூர்’. இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.