விலாடிவோஸ்டாக்:
ரஷ்யாவுக்கு 2நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு விலாடிவோஸ் டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார மாநாட்டில் உரை யாற்றினார். அப்போது, ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ வளர்ச்சிக்கு இந்தியா 1 பில்லியன் டாலர் நிதி உதவி செய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விலாடிவோஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்ட நிலையில், ரஷ்யாவின் வோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே ஒரு முழுமையான கடல்வழி பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்று அங்கு நடைபெற்ற 5வது கிழக்கு பொருளாதார ஃபோரமில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஃபார் ஈஸ்ட்’ (தூர கிழக்கு) பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் நிதியுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசியவர், “எனது தலைமையிலான அரசாங்கம், கிழக்கு ஆசியாவில் இருக்கும் தேசங்களுடன் ‘ஆக்ட் ஈஸ்ட்’ என்கிற கொள்கையின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று கூறியவர், இன்று வெளி யிட்டிருக்கும் அறிவிப்பின் மூலம் ‘ஆக்ட் ஃபார் ஈஸ்ட் பாலிசி’-யில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என உறுதியாக நம்புவதாகவும், எங்கள் நாட்டின் பொருளாதார வெளியுறவு விவகாரத்திலும் இந்த அறிவிப்பு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். நட்புடன் இருக்கும் பல தேசங்களின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றிடும்.
இவ்வாறு மோடி பேசினார்.