புவனேஸ்வர்
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அடித்த யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பிரதமர் மோடி இவ்விரு மாநிலங்களிலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வை இட்டார். அதன் பிறகு ஒடிசா மாநிலத்தலைநகர் புவனேஸ்வரில் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவின் பட்நாயமக் மற்றும் மாநிலத்தலைமைச் செயலர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். பிரதமரிடம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான உதவிகளை அளிப்பதாக மோடி உற்தி அளித்தார்.
அங்கிருந்து மேற்கு வங்கத்துக்கு விமானம் மூலம் சென்ற அவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டர். மோடியுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் சென்றார். மேற்கு வங்கத்தின் கலைக்குண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 15 நிமிடங்கள் மட்டுமே கலந்து கொண்டார். அப்போது அவர் நிவாரணப்பணிகளுக்காக மத்திய அரசு ரூ.20000 கோடி நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். வேறு பணிகள் உள்ளதால் தாம் அங்குச் செல்ல உள்ளதாகக் கூறி அங்கிருந்து மம்தா சென்று விட்டார்.
பிரதமர் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி உடனடி நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார் இந்த 1000 கோடியில் ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடி மற்றும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் இரு மாநிலங்களுக்கும் சேர்ந்து ரூ. 500 கோடி வழங்கப்பட உள்ளது.
இதைத் தவிரப் புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50000 வழங்கப்பட உள்ளது. மத்திய குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் ஆய்வு செய்து சேதங்களை மதிப்பிட உள்ளனர். அதன் பிறகு கூடுதல் நிதி உதவி வழங்க உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.