புதுடெல்லி :
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
‘சீன எல்லைக்கு இந்திய வீரர்கள் ஆயுதங்கள் இன்றி ஏன் அனுப்பப்பட்டனர்?’ என நேற்று முன்தினம் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், நேற்று அவர் ‘வீரர்களை காட்டிக் கொடுக்கிறது பாஜ,’ என்ற ஹேஸ்டேக்குடன் புதிய டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில், ‘அரசின் மூத்த அமைச்சர்கள் பிரதமரை பாதுகாப்பதற்காக பொய் கூறுவது வருத்தம் அளிக்கிறது. உங்களின் பொய்களால் இந்திய வீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்தி விடாதீர்கள்,’ என குறிப்பிட்டுள்ளார். இத்துடன், வீரமரணம் அடைந்த வீரர் ஒருவரின் தந்தை, ‘சீன வீரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டபோது இந்திய வீரர்கள் ஆயுதமின்றி இருந்தனர்,’ என கூறியுள்ள வீடியோ பதிவையும் இணைத்துள்ளார். இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கவே, வீரரின் தந்தை கூறிய பதிவை ராகுல் பதிவிட்டுள்ளார்.
இந்த சமயத்தில்தான், அதாவது நேற்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.. இதில் பிரதமர் பேசும்போது, ‘இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை.. இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல்காந்தி மீண்டும் ஒரு ட்வீட் போட்டு, 2 கேள்விகளை கேட்டுள்ளார்.. அதில், ‘சீனாவின் ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து அவர்களிடம் சரணடைந்துள்ளார் பிரதமர்.
அந்த இடம் சீனாவுடையது என்றால், ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர்? நமது வீரர்கள் எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்? என்று கேட்டுள்ளார். குல் காந்தி. ராகுல் காந்தியின் கேள்விக்கு மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.