டெல்லி: பிஎம்.கேர்ஸ்க்கு 5நாளில் ரூ.3,076 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ள நிலையில், நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் பெயரை அறிவியுங்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது. ஆனால், இந்த நிதியில் இருந்து, எந்தவொரு செலவினங்களுக்கும் நிதி வழங்கியதாக தகவல்கள் இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் மத்திய தணிக்கை அறிக்கை பிஎம் கேர்ஸ் (PM-CARES) நிதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அந்த அறிக்கையில் உள்ள “1 முதல் 6 வரையிலான குறிப்புகள்” பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த தணிக்கை அறிக்கையில், பி.எம்.ஓ-வின் இணைச் செயலாளர் ஸ்ரீகர் கே பர்தேஷி, பி.எம்-கேர்ஸ் நிதி சார்பாக “செயலாளர்” என்று கையெழுத்திட்டுள்ளார், குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹார்டிக் ஷா, பிரதமர் மோடியின் தனியார் செயலாளர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் தணிக்கை அறிக்கையில், நிதி வழங்கிய நன்கொடையாளர்கள், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பங்களிப்பாளர்களா என்பது குறித்து எந்தவித தகவலும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. இதில் ரூ,3,075.85 கோடி உள்நாட்டிலிருந்தும், ரூ.39.67 லட்சம் வெளிநாட்டி லிருந்தும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரெல்லாம் இந்த 5 நாட்களில் நன்கொடை அளித்தார்கள், அந்த வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்கள் பெயர் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, 5நாளில் ரூ.3,076 கோடி நிதி வழங்கிய நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
“பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டதிலிருந்து 2020, மார்ச் 26 முதல் 31-ம் தேதிவரை 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளது என பிஎம் கேர்ஸ் தணிக்கையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
ஆனால் இந்த தாராள நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளியிடப்படாது. ஏன்?
ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் ஒரு தொகையை விட அதிகமாக பங்களிக்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளிப்படுத்த கடமைப் பட்டுள்ளது. PM CARES FUND இந்த கடமையில் இருந்து ஏன் விலகி உள்ளது?
இந்தக் கடமையிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்குக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நன்கொடையாளர்கள் நன்கு அறியப்பட்டவர்கள்தான்.
அறக்கட்டளையாளர்களுக்கும் நன்கொடையாளர்களை நன்கு தெரியும். நன்கொடையாளர் களின் பெயர்களை வெளிப்படுத்த அறங்காவலர்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.