புதுடெல்லி:

பிஎம் கேர்ஸ் மூலம் எவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்பதை ஆர்டிஐ மூலம் விவரங்கள் வழங்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக நன்கொடை வழங்க PM-CARES என்ற அவசரகால நிவாரண நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த PM-CARES நிதியத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து,சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES நிதியத்திற்கு பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நிவாரணம் பெற பிரதமர் நரேந்திர மோடி புதிய கணக்கை தொடங்கியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதற்கிடையே, அவசரகால நிவாரணம் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவி தொடர்பாக விவரங்களை அளிக்கும் படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்து பல்வேறு தரப்பினர் விண்ணப்பித்தனர். இதற்கு பதிலளித்த, “தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் படி பிஎம் கேர்ஸ் நிதி ஒரு பொது அமைப்பு அல்ல” . பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது. மேலும் தகவலுக்கு pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுரேந்திர சிங் ஹுடா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மக்களிடம் இருந்து பெறப்படும் நிதி சம்பந்தமான விஷயங்களில் வெளிப்படை தன்மை தேவைப்படுகிறது என்றும், இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இம்மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் சுரேந்தர் சிங் ஹுடா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை ஜூன் 10-ஆம் தேதி விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

பிஎம் கேர்ஸ் அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர கோரி ஏற்கனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கறிஞர் அரவிந்த் வாக்மாரே என்பவரும் வழக்கு தொடர்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது. .