நெல்லை:
தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் டீக்கடைகளில் டீ, காபி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்படு வதை தவிரத்து, பார்சல் டீ வாங்குபவர்களுக்கு ஏதுவாக சிறிய ரக எவர்சில்வர் தூக்கு வாளியில் பார்சல் டீ, காபி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோல துணிப்பைகள், ஓலைப்பெட்டிகளும் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
நெல்லையில், டீ, காபி பார்சல் வாங்கும் வாடிக்கையாளர்களின் நலனை முன்னிட்டு, பல டீக்கடைகளில் எவர்சில்வர் தூக்கு வாளியில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வாடிக்கை யாளரிடம் ரூ.150 டெபாசிட் வாங்கிக்கொள்கின்றனர். வாடிக்கையாளர் தூக்கு வாளியை திருமப கொடுத்தால் அவர்கள் கொடுத்த டெபாசிட் பணம் திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு மீண்டும் பழைய முறையே நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
மிட்டாய் கடைகளில் ஒலைப்பெட்டிகள்அதுபோல மளிகை பொருட்கள், கருப்பட்டி, அல்வா மற்றும் இனிப்பு கார வகைகள் எடுத்துச் செல்லும்வகையில் பழைய முறையான ஓலைப்பெட்டிகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்வீட் கடையில் பலகார வகைகளை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பார்சல் செய்து கொடுக்கப்படுகிறது.
இறைச்சி கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பழைய முறையான வாழை இலை பார்சல் மீண்டும் தொடங்கி உள்ளது. பல இடங்களில் கறிகள் வாழை இலையில் மடித்து வழங்கப்படுகிறது.
பூக்கடைகளிலும், பூக்கள், மாலைகள் வாழை இலையில் பார்சல் செய்தே கொடுக்கப்படுகிறது.
இந்த புதியமுறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் சென்னை போன்ற நகரங்களிலும் ஓலைப்பெட்டிகள், துணிப் பைகள் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.