அறிவோம் தாவரங்களை  –  பிரண்டை

பிரண்டை. (Cissus quadrangularis)

இந்தியா, இலங்கை உன் தாயகம்!  வேலிகளில் படர்ந்து இருக்கும் கொடியவகை தாவரம் நீ!

ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை , புளிப்பிரண்டை, சதுரப்பிரண்டை, இனிப்புப் பிரண்டை, முப்பிரண்டை, ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனப் பல வகையில் பரிணமிக்கும் பயன்பாட்டுக் கொடி நீ!

வஜ்ரம்- வைரம்.உடைந்த எலும்புகளை ஒன்று சேர்த்து வைரக்கல் போல் வலிமைப் படுத்துவதால் நீ ‘வஜ்ர வல்லி’ ஆனாய்!

வீக்கம், சுளுக்குப் பிடிப்பு, இடுப்பு வலி, ஞாபக சக்தி, வாய்வுப் பிடிப்பு, முதுகு  வலி, கழுத்து வலி,செரிமானம், மாதவிடாய், நீரிழிவு, இதய நலம், குடல்புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத   மூலிகை நிவாரணி நீ!

சட்னி, வடகம், பொடி, துவையல் எனப் பலவகையிலும் பயன்படும் நலமிகு கொடியே!

‘பெத்த வயித்துலே பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும், ‘பெற்ற வயிற்றுக்குப் பிரண்டை’   என்ற முதுமொழிகளுக்கு வித்தாய் அமைந்த சத்துக்கொடியே!

சித்தர்கள் போற்றிய சிறப்புக் கொடியே!

ஆயுர்வேத  மருத்துவத்தில் பயன்படும் அற்புதக் கொடியே!

உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் உன்னத மூலிகைக் கொடியே!

ரத்த மூலத்திற்கு ஏற்ற இனிய  மருத்துவக் கொடியே!

ஊளைச் சதையையும்  உடல் பருமனையும் குறைக்கும் நல்ல கொடியே! பிரண்டை உப்புத் தயாரிக்கப் பயன்படும் கற்பகக்கொடியே!

வெள்ளை நிறப் பூப் பூக்கும் நல்ல கொடியே!

கருப்பு நிற பழம் கொடுக்கும் கரும்புக் கொடியே!

முக்கோண வடிவ இலைகளை உடைய முதன்மைக் கொடியே!வெப்பமான  இடங்களில் வளரும் பசுமைக் கொடியே!

உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்  உன்னதக் கொடியே!

நீவிர் வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.