ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கச் சதி..
கொரோனா உச்சத்தில் ஏறத்தொடங்கிய மார்ச் மாதக்கடைசியில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது.
இப்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க ரகசிய முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைமை கொறடாவும் ,சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் ஜோஷி இந்த திடுக்கிடும் புகாரைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மகேஷ் ஜோஷி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,’’ ராஜஸ்தான் அரசை ஆதரிக்கும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் கட்சி மாறச்செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது அவர்கள் திட்டம். எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மொத்தம் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள்.ஆதரவு உள்ளது.
இது தவிர அங்குள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரில் 12 பேர் காங்கிரசை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.