புதுடெல்லி:
ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரயில்வேத் துறையில் கடந்த 6 ஆண்டுகளில் பாதுகாப்பு குறித்து அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு பயணி கூட உயிரிழக்கவில்லை.
2019-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி நடந்த விபத்தில் பயணி உயிரிழந்ததுதான், கடைசியாக ரயில்வே விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 மாதங்களாக, ஒரு பயணி கூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை.
அதே போல் ரயில்வே பாலம் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பு ஒரு முறையும், பின்பு ஒரு முறையும் பாலங்களில் ஆய்வு மேற்கொள்கிறோம். புதிய மறுசீரமைக்கப்பட்ட ரயில்வே வாரியத்தில், இந்திய ரயில்வேயில் முதன்முறையாக பாதுகாப்புக்கான இயக்குநர் ஜெனரலை நியமித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்