டில்லி

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தனது தொழில் தர்மத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறை சொல்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் பொருளாதாரத்துக்கான  நோபல் பரிசு பெற்றுள்ள மூவரில் அபிஜித் பானர்ஜியும் ஒருவர் ஆவார்.  இந்தியாவில் பிறந்த அபிஜித் தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.    நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த குறைந்த பட்ச ஊதிய உறுதி திட்டம் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த திட்டம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தரவில்லை எனினும் உலக அளவில் மிகவும் பாராட்டுக்களைப் பெற்றது.

மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பியூஷ் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை புனே நகரில்,”நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கருத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக இடது சாரி ஆதரவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.  அவர் உருவாக்கிய நியாய் (குறைந்த  பட்ச ஊதிய உறுதி) திட்டத்தை இந்திய மக்கள் நிராகரித்து காங்கிரஸைத் தோற்கடித்துள்ளனர்.” எனக் குறிப்பிட்டார்.

இதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து அபிஜித் பானர்ஜி, “மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  என்னை முழுவதுமாக இடது சாரி ஆதரவாளர் எனக் குறிப்பிட்டு எனது தொழில் தர்மத்தை குறை கூறி உள்ளார்.   காங்கிரஸ் கட்சியைப் போல் பாஜக அரசு இந்திய மக்களின் வருமானம் குறித்துக் கேட்டிருந்தால் நான் அவர்களுக்கு  உண்மையைச் சொல்லி இருக்க மாட்டேனா?  நான் அவர்களுக்கு தற்போதைய நிலையைத் தெளிவாகச் சொல்லி இருப்பேன்.

எனது தொழிலில் நான் எப்போதும் தொழில் தர்மத்தை மீறியது இல்லை.  எனது பொருளாதார கருத்துக்கள் என்றும் ஒருதலையாக இருந்ததில்லை. நான் பணியாற்றிய அரசுகளில் பல பாஜக தலைமையிலான அரசுகளாகும்.   நான் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அம்மாநிலத்துக்கும் பணியாற்றி உள்ளேன்.  அப்போது எனது அனுபவத்தின் மூலம் பல கொள்கை முடிவுகளை அந்த அரசு எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பானர்ஜி, “தற்போது பொருளாதாரம் கடும் சிக்கலில் உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.  தேசிய மாதிரி கணக்கெடுப்புக்கும் எனக்கும் உள்ளது ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே ஆகும்.  அது இந்தியாவின் சராசரி நுகர்வு ஆகும்.  கடந்த 2014-15 ஆம் வருடம் இருந்ததை விட நமது சராசரி நுகர்வு குறைந்துள்ளது,   இது முன்னெப்போதும் நடக்காத ஒரு நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.