இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, சுழற்பந்து வீச்சுக்கு பெரியளவில் ஒத்துழைத்தது. ஆட்டம் 2 நாட்களுக்குள் முடிவைடைந்தது.
மொத்தமாக விழுந்த 30 விக்கெட்டுகளில் 90% விக்கெட்டுகளுக்கு மேல் சுழற்பந்து வீச்சுக்கே விழுந்தன. இதனையடுத்து, இந்த ஆடுகளம் மோசம் என்ற விமர்சனத்தை ஒருசாரார் எழுப்பினர். இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் சிலரோடு சேர்ந்து, இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சிலரும் விமர்சித்தனர்.
ஆனால், அதேசமயம், இந்தியாவின் கேப்டன் கோலி உள்ளிட்ட பலர் ஆடுகளத்தை ஆதரித்தனர். இவர்களுக்கு ஆதரவாக கவாஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் முன்னாள் வீரர்களோடு, நாதன் லயன், விவியன் ரிச்சர்ட்ஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களும், ஆடுகளத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், 4வது போட்டிக்கான ஆடுகளமும், 3வது போட்டிக்கு தயார்செய்யப்பட்ட ஆடுகளத்தைப் போலவே இருக்கும் என்றே பல செய்திகள் தெரிவித்தன.
ஆனால், இன்றையப் போட்டி துவங்கி, குளிர்பான இடைவேளை வரை, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு பெரியளவில் ஒத்துழைக்கவில்லை. இங்கிலாந்து இழந்துள்ள 4 விக்கெட்டுகளில் 2 மட்டுமே அக்ஸாருக்கு கிடைத்துள்ளன. இதர 2 விக்கெட்டுகளை எடுத்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில், பிங்க் பந்து அதிகமாக திரும்பும் என்று கூறப்படுகிறது. ஆனால், வழக்கமான சிகப்பு பந்து ஓரளவு பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இதுதான் உண்மையா? அல்லது விமர்சனங்களுக்குப் பணிந்து, ஆடுகள அமைப்பில் சில மாற்றங்களை பிசிசிஐ செய்ததா? என்ற தகவல் இனிமேல் வெளியாகலாம்!