சண்டிகார்: இந்திய விமானப்படையின் ஜாகுவார் ரக ஃபைட்டர் ஜெட் ஒன்று பறவையின் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்ஜின் செயலிழந்த நிலையில், அதன் இளம் விமானி சமயோசிதமாக செயல்பட்டு ஜெட்டை பத்திரமாக தரையிறக்கி, பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமான தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது ஒரு ஜாகுவார் ரக ஃபைட்டர் ஜெட். மேலேறிய சில விநாடிகளில் பறவைகளின் கூட்டமொன்றில் சிக்கியது. அப்போது ஒரு பறவையின் தாக்குதலுக்கு உள்ளானதால், அந்த ஜெட் விமானத்தின் ஒரு இன்ஜின் செயலிழந்தது.
இதனையடுத்து ஜெட் விமானத்தை உடனடியாக பத்திரமாக தரையிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில், ஜெட் விமானம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்துவிட்டால், விமானப் படைக்கு ஒரு விமான இழப்பு ஏற்படுவதோடு, பல பொதுமக்களும் பலியாகும் மோசமான சூழல் ஏற்படும்.
எனவே, இந்த நேரத்தில்தான் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டார் அந்த இளம் விமானி. ஜெட் விமானத்தில் இணைக்கப்பட்டிருந்த 2 கூடுதல் எரிபொருள் டேங்குகளையும், பயிற்சி குண்டுகளையும் கீழே விழச்செய்தார். இதன்மூலம் அந்த ஜெட் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, பல மக்களின் உயிரைக் காப்பாற்றியதோடு, விமானப் படைக்கு நேரவிருந்த இழப்பையும் தடுத்து நிறுத்தினார்.
அவரின் இந்த செயல் மிகவும் உயர்தரமான பயிற்சித் தன்மை கொண்டது என்று விமானப்படை சார்பாக புகழப்படுகிறது.