வரும் ஆகஸ்ட் 7ம் தேதி ஆவணி அவிட்டம் அன்று பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது.
இதற்கான அறிவிப்பு சென்னை மயிலாப்பூர் வேணுகோபால் வித்யாலயா பள்ளி அருகே உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை படம் எடுத்து சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட… இப்படம் வைரலாகியது.
இப்போராட்ட அறிவிப்பை விமர்சித்து இந்துத்துவா ஆட்கள் சமூகவலைதளங்களில் பதிவிடத் துவங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், இந்த படத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் விஸ்வநாதனுக்கு அனுப்பினார். இந்த விளம்பரத்தை உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த நிலையில் இன்று இந்த விளம்பரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டது.
இதுவும் படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியானது. காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் உட்பட பலரும் நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறிப்பிபட்ட இடத்தில் இப்போது, “நமோ.. ஜெய் ஹிந்துத்துவா” என்று ஆங்கிலத்திலும், “இது காவிகளின் கோட்டை” என்று தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
இந்த படமும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிதாக எழுதப்பட்டுள்ள, “ஜெய் ஹிந்துத்துவா.. காவிகளின் கோட்டை” ஆகிய வார்த்தைகள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக காவல்துறையில் புகார் கொடுக்க சில அமைப்புகள் தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது.