பெங்களூரு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலை குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன் சொகுசாக உள்ள புகைப்படம் வெளிவந்துள்ளது.

கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே 33 வயதான ரேணுகாசுவாமி என்ற ஆட்டோ ஓட்டுனர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில், நடிகர் தர்ஷனுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை பவித்திராவிற்கு இந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தர்ஷன் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது. தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி பெங்களூரு நீதிமன்றம் தர்ஷன், பவித்ரா மற்றும் உடன் இருப்பவர்களின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 வரை நீட்டித்தது. நீதிமன்றக் காவலில் உள்ள தர்ஷன் சிறையில் மூன்று பேருடன் அமைந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. ஆம்னால் சுற்றிலும் புல் நிறைந்த ஒரு பெரிய திறந்தவெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து, மூன்று பேருடன் தர்ஷன் ஜாலியாக அரட்டை அடிப்பது போல் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உள்ளது.

தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எப்படி சிகரெட், டீ போன்ற சகல வசதிகள் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேங்க்ஸ்டர் வில்சன் கார்டன் நாகா, நாகராஜ் (தர்ஷனின் மேலாளர் மற்றும் சக குற்றவாளி) மற்றும் குல்லா சீனா ஆகியோர் தர்ஷ்னுடன் அமர்ந்து உள்ளனர்.  அந்த புகைப்படத்தில் அவர்கள் எதையோ பார்த்து சிரிப்பது போல தெரிகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறையில் சகல வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இந்த படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் எழுகிறது. இந்நிலையில் இறந்த ரேணுகாசாமியின் தந்தை சிவ கவுடா, இந்த புகைப்படம் தொடர்பான தீவிர விசாரணை எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.