டில்லி,
வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் டீசல் வாங்கலாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறி உள்ளார். இதன் காரணமாக பெட்ரோல் டீசல் வீடு தேடி வருகிறது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை முறை விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,
நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, அனைத்து துறைகளிலும் வணிகம் செய்யும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு நன்மை கிடைக்கிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவுசெய்தால் வீடுகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம் என்று கூறினார்.
இதை கருத்தை அவர் தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். அதில, ஆன்லைனில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் முறை பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீடு தேடி பெட்ரோல், டீசல் வரும். அதற்கான சட்டப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்ன்று குறிப்பிட்டுள்ளார்.