வாஷிங்டன்
கொரோனாவால் பெட்ரோல் தேவை குறைந்ததால் அமெரிக்காவில் ஒரு காலன் பெட்ரோல் 95 செண்டுக்கு விற்பனை ஆகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல உலக நாடுகள் முழு அடைப்பை அறிவித்துள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதுவும் முழுவதுமாக இயங்கவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை மிகவும் குறைந்துள்ளது. இது அமெரிக்காவில் பெட்ரோல் விலையை வெகுவாக குறைத்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது ஒரு காலன் பெட்ரோல் விலை 95 செண்ட் என விற்கப்படுகிறது. 1 காலன் என்பது 3.8 லிட்டர் ஆகும். அதாவது 3.8 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.62 ஆகிறது. இந்தியக் கணக்கின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ. 18.90 ஆகிறது. இந்த விலை மேலும் குறையலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே கச்சா எண்ணெய் விலைக் குறைவால் பெட்ரோல் விலை 65% குறையத் தொடங்கியது. தற்போது அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒவ்வொரு பகுதியிலும் மாற்றத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வரி விகிதம் மாறுவதால் இந்த விலை மாற்றம் உள்ளது.
இதில் 1 காலன்பெட்ரோல் விலை 99 என்பது மிகவும் குறைந்த விலையாகும். இதற்கு முக்கிய காரணம் நல்ல தரமான கச்சா எண்ணெய் ஒரு பாரல் 12 முதல் 13 டாலர் விலையில் விற்கப்படுவதாகும்.
கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து வருவதால் பெட்ரோல் விலை மேலும் குறைந்து 1 காலன் விலை 79 செண்டுகளாக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது 1 காலன் 99 செண்டுக்கு விற்கப்பட்ட போதும் போக்குவரத்து முடக்கத்தால் விற்பனை மிக மிக குறைவாகவே உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை மே மாதம் வரை நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது. ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்காதது இந்த விலைக் குறைவுக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் தேவை இல்லாததே விலைக் குறைவுக்குக் காரணம் என்பதே உண்மையாகும்.
தற்போதுள்ள நிலையில் விலை குறைந்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்காததால் பெட்ரோல்பங்கு உரிமையாளர்களுக்கு அதிகம் இழப்பு ஏற்படுவதாக் கூறப்படுகிறது. பெட்ரோல் விலை குறைந்தும் அதைப் பயன்படுத்த முடியாதபடி போக்குவரத்து தடை உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கும் எவ்வித பயனும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.