டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. தலைநகர் டெல்ல்லி, மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை சென்னையில் ஒரு லிட்டர்ரூ.96.94 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.15 ஆக விற்னை செய்யப்பட்டு வருகிறது . சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எண்ணை நிறுவனங்கள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த மத்தியஅரசுதவறி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயா்த்தப்பட்டு வருவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜூன்.11) நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை( ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் அடையாளம் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.