சென்னை
தொடர்ந்து 10 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. ஆயினும் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களையொட்டி விலையில் மாற்றம் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்படி கடந்த 10 நாட்கலாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.111.35 எனவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.107.45 எனவும் விற்கப்படுகிறது.
டில்லியில் 80 காசுகள் விலை உயர்ந்துள்ளது. அங்கு இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் லிட்டர் ரூ.101.81 எனவும் டீசல் ரூ.93.07 எனவும் விற்கப்படுகிறது. மும்பையில் 84 காசுகள் விலை உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ரூ. 116.72 எனவும் டீசல் ரூ.100.94 எனவும் விற்கப்படுகிறது.