டெல்லி: பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியின்போது, பொதுமக்கள் பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடுவது வழக்கம். ஆனால், காற்று மாசு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. காலை, மாலை 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது. பட்டாசு தொழிலும் நசுங்கி உள்ளது.
இந்த நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கணேசன் சார்பில் இடைக்கால மனு செய்யப்பட்டுள்ளது. மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீரி உருவாக்கிய பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க சங்கத்தைச் சேர்ந்த ஆலைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியைச் சுற்றியுள்ள 8 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும். நாட்டின் பன்முக பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமய சடங்குகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைந்தபட்சம் 6 மணி நேரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.