திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நெருங்கி வருவதால், மண்டல பூஜையின்போது, வெளிமாநில பக்தர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதல்வர் கூறியுள்ளார். அதே நேரத்தில் முதியவர்கள், சிறுவர்களுக்கு அனுமதியில்லை என்றும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்ட வழிபாட்டு ஸ்தலங்கள் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலும் மாதாந்திர பூஜைகளுக்கான திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால், கார்த்திகை மாத மண்டலபூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். அதனால், இந்த ஆண்டும் மண்டல பூஜையின்போது பக்தர்கள் தரிசனத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை கார்த்திகை 1ம் தேதி ( நவம்பர் 15 ஆம் தேதி) அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட சான்றிதழை கையில் கொண்டு வர வேண்டும்.
கோயிலிலும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மலையேறும் போது, முகக்கவசம் அணிய வேண்டுமா, தேவையில்லையா என்பது பற்றி விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
65 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் கோயிலுக்கு வர அனுமதியில்லை,
பக்தர்கள் சபரிமலையில் தங்குவதற்வோ, எருமேலி, பம்பை ஆற்றில் குளிக்கவோ கூடாது
குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படும்.
பக்தர்களுக்காக பேருந்து வசதியும் அதிகரிக்கப்படும்
தரிசனம் முடித்தவுடன் உடனடியாக கோயிலை விட்டு கிளம்ப வேண்டும்.
இதற்காக ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளும் மையங்கள் மாநிலத்தில் அமைக்கப்படவிருக்கின்றன. பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றியே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் அக்டோபர் மாதம் 16.10.2020 முதல் 21.10.2020 வரை கோவில் நடை திறந்திருக்கும் என்றும், ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.