சென்னை : பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்த வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“திராவிட மாடல் குறித்து கேலி பேசுவோருக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்” ஊருக்குள் வர தடை, கோயிலுக்குள் வர தடை என தடைகளை உடைத்து அனைவரின் மனதிலும் நுழைந்திருக்கிறார் பெரியார் என கூறினார்.
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையில் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர், அங்கு நடைபெற்ற விழாவில், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பெரியார் கைத்தடி மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “என்ன பேசுவதென்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர் வீரமணி அளித்துள்ள அந்தப் ரிசை வாங்குகிற போது, என்னையே நான் மறந்திருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்றிருக்கலாம், எனக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. போதும், எனக்கு இது போதும். திராவிட மாடல் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்போருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்.
கி.வீரமணி அளித்த பெரியாரின் கைத்தடி பரிசுக்கு எதுவும் ஈடாகாது. “பெரியாரின் கருத்துக்கள் உலகமயமாக்கப்பட்டு டிஜிட்டல் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழினம் சுயமரியாதை பெற தனது வாழ்நாள் முழுவதும் பெரியார் உழைத்தார். பெரியார் மறைந்து 51 ஆண்டுகள் ஆனபிறகும் அவரை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்; இதுதான் அவரின் தனித்தன்மை. பெரியாரின் நினைவிடத்திற்கு வந்ததை தாய் வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன்.
தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம் நான் உணர்ச்சி, எழுச்சியைப் பெறுவதுண்டு. அதைப்பெற்று நான் இன்றைக்கு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமைப் பெறவும், சுயமரியாதையைப் பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களைப் புரிந்து நம் இனதுக்காக அயராது உழைத்த பெரியாரின் நினைவுநாள் இன்று.
அவருடைய கருத்துகளை, எண்ணங்களை, போராட்டங்களை, தியாகங்களை, வாழ்க்கை வரலாற்றை நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்கிற வகையில் டிஜிட்டல் நூலகமாக ஆய்வு மையம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி கூறினார். பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்த பயணத்தை தொடங்கி, இந்த முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம்.
அவர் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய முற்போக்கு கருத்துகளுக்காக, மானுட சமுதாயத்தின் விடுதலைக்கான கருத்துகளுக்காக பழமைவாதிகள் மற்றும் பிற்போக்குவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். ஊருக்குள் வருவதற்கு தடை, பேசுவதற்கு தடை, கோயிலுக்குள் நுழையத் தடை, எழுதுவதற்கு தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை, அத்தனை தடைகளையும் உடைத்து அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழைய விடவில்லை. இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேரின் மனதிலும் அவர் நுழைந்திருக்கிறார்.
அதனால்தான், தந்தை பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதுதான் அவருடைய தனித்தன்மை. பெரியாரின் கருத்துகளை இன்றுவரை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து, என்றென்றும் வாழ்கிறார் பெரியார் என்ற நிலையை உருவாக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி. பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்
பெரியாரின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. பெரியாரை உலகமயமாக்கி உலகின் பொதுச்சொத்தாக பெரியாரை கொண்டு சேர்த்திருக்கிறோம். ஒற்றுமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் பாடுபட்டவர் பெரியார்,
இவ்வாறு கூறினார்.